சைபர் தாக்குதல் அபாய பட்டியலில் இலங்கை! எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்*
மத்திய கிழக்கு மோதல்களுக்கு இணையாக இணையதளங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாகவும் இவ்வாறான சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அதிக அபாயம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளதாக நாட்டின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப நிபுணரான ஹர்ஷ விஜயவர்தன இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், உலகில் இணைய அச்சுறுத்தல்கள் நிலவும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 20-வது இடத்தில் உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 91 இலட்சம் இணையத்தளங்களுக்கு சைபர் தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கொவிட் பெருந்தொற்று காலத்திலும் ரஷ்யா - உக்ரைன் போரின் உச்சக்கட்டத்திலும் இது அவதானிக்கப்பட்டது.
சில சமயங்களில் அரசியல் தேவைகளுக்காகவும் இன்னும் சில வேளைகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களாகவும் இவை இணையத்தில் பெருமளவில் இடம்பெறுகின்றன.
கடந்த காலங்களில் இலங்கையின் முக்கிய அரச இணையதளங்கள் சிலவற்றுக்கும் ஒரு வர்த்தக வங்கி, காப்பீட்டு நிறுவனம் மற்றும் முன்னணி ஆடைத் தொழிற்சாலை என்பவற்றுக்கும் இவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டன.
அண்மையில் நிதியமைச்சில் 2.5 மில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணி மோசடி செய்யப்பட்டதைப் போன்றதொரு சம்பவம் இதற்கு முன்னர் இடம்பெற்றதில்லை என்று அவர் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள பல நிறுவனங்கள் மிக அதிக விலை கொடுத்து தரவு பாதுகாப்பு முறைமைகளைப் (Data Protection Systems) பெற்றுக் கொண்ட போதிலும் அவற்றைச் சரியான முறையில் செயற்படுத்தி அபாயங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பல சந்தர்ப்பங்களில் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இலங்கை நிபுணர்கள் இந்த அச்சுறுத்தல்களை உடனடியாக அடையாளம் காண வேண்டும் என்றும் இந்த சைபர் அபாயங்களைக் குறைப்பதற்கு வலுவான வேலைத்திட்டமொன்றைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பது அத்தியாவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments
Post a Comment